வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-09 17:36 GMT
சிவகங்கை, 
உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
உள்ளாட்சி தேர்தல் 
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சியில் நடைபெற உள்ள தேர்தலில் மொத்தம் 117 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேபோல் இளையான்குடி, நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள தேர்தலில் மொத்தம் 168 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
வாக்கு எண்ணிக்கை மையம் 
காரைக்குடி நகராட்சிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், புதுவயல் ஆகிய பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள மெயின் பிளாக் முதல் தளத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் இருக்கைகள் அமைக்கும் பணியும், மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கும் அறையையும் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 
இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பேரூராட்சி, சிங்கம்புணரி, நெற்குப்பை ஆகிய இடங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. அங்கும் தற்போது முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
போலீஸ் பாதுகாப்பு 
மேலும் காரைக்குடி நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பேரூராட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்்திரங்கள் நேற்று மதியம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சரி பார்த்து அவற்றை அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. 
இதேபோல் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்திற்கும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள அறையில் வைத்து அனைத்து கட்சியினர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போது சூடி பிடிக்க தொடங்கி உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்