பெண்ணாடம் பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.19 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
பெண்ணாடம் பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.19 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம்,
வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகிக்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றர். அந்த வகையில் பெண்ணாடம் தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் பெண்ணாடம் அடுத்த இறையூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை அதிகாரிகள் மறித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ரூ.17 லட்சத்து 55 ஆயிரத்து 60 இருந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதை பெண்ணாடம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகவேலிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் பெண்ணாடம் அடுத்த மாளிகைகோட்டம் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் விருத்தாசலம் தாலுகா மாத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் அரவிந்த் (வயது 27), விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம், திட்டக்குடி பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்புவதற்காக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால், ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை பெண்ணாடம் பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகவேலிடம் ஒப்படைத்தனர்.