கொத்தடிமை தொழில்முறை குறித்து புகார் தெரிவிக்க உதவி எண் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டார்

கடலூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழில்முறை குறித்து புகார் தெரிவிக்க கலெக்டர் பாலசுப்பிரமணியம் உதவி எண்ணை வெளியிட்டார்.;

Update: 2022-02-09 16:34 GMT
கடலூர், 

தொழிலாளர் முறை ஒழிப்பு

வருடந்தோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர் அனைத்து துறை அலுவலர்களும் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து கொத்தடிமை தொழில் முறை குறித்து புகார் தெரிவிக்க 1800 4252 650 என்ற உதவி எண்ணை கலெக்டர் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க மாநில அளவிலான செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, அதில் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டறிதல், விடுவித்தல், அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சட்ட விரோதம்

கொத்தடிமை தொழிலாளர் முறை, ஒரு தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்ல, இது கடுமையான மனித உரிமை மீறல் ஆகும். 1976-ல் கொத்தடிமை தொழிலாளர் முறை, சட்ட விரோதமென தடை செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி கொத்தடிமை தொழிலாளர் முறை என்பது ஒருவகையான கட்டாய தொழிலாளர் முறையாகும். இது கடனுக்காக கட்டாய தொழிலாளர் ஆக்குதல் அல்லது வேறு சமூக கட்டுப்பாட்டின் காரணமாக தொழிலாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். அதனால் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு கடலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினரால் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமாரி, உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன், உதவி ஆணையர் ராமு மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்