1,500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர்; 8 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு

கொடைக்கானலில், ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, 1,500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

Update: 2022-02-09 16:13 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானலில், ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, 1,500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
 கொடைக்கானலுக்கு சுற்றுலா
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் அழகர்சாமி. அவருடைய மகன் ராம்குமார் (வயது 32). இவர், அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். தனது நண்பர்கள் 7 பேருடன் இவர் கடந்த 1-ந்தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார்.
கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள சுற்றுலா இடங்களை அவர்கள் கண்டுகளித்தனர். இந்தநிலையில் கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், வட்டக்கானல் அருகே உள்ள ரெட்ராக் பகுதிக்கு கடந்த 2-ந்தேதி ராம்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சென்றனர்.
அபாயகரமான பள்ளத்தாக்கு
செங்குத்தான சிவப்பு நிற பாறைகளை கொண்ட இடம் என்பதால், அதற்கு ‘ரெட்ராக்’ என்ற பெயர் ஏற்பட்டது. இது இயற்கை எழில் கொஞ்சும் மரம், செடிகளை கொண்ட இடமாகும். மதியம் 2 மணிக்கு பிறகு அடர்ந்த பனிமூட்டம் அப்பகுதியை ஆக்கிரமித்து கொள்ளும் அழகிய காட்சி அன்றாடம் அரங்கேறும்.
இதுமட்டுமின்றி காண்போரை நிலைகுலைய செய்யும் அபாயகரமான பள்ளத்தாக்குகளை கொண்டது இந்த ரெட்ராக். சுற்றுலா பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால், ரெட்ராக் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
‘செல்பி’எடுக்க முயற்சி
இந்தநிலையில் ரெட்ராக் மலைப்பகுதிக்கு சென்ற ராம்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ரெட்ராக் பகுதியில், செங்குத்தான பாறையின் நுனி பகுதிக்கு ராம்குமார் சென்றார். பின்னர் அங்கிருந்தபடி ‘செல்பி’ எடுக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள பள்ளத்தாக்கில் அவர் தவறி விழுந்து விட்டார். இதனை கண்ட அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், தீயணைப்பு படையினர், மலையேற்ற குழுவினர் மற்றும் உள்ளூர் மக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் ராம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த பனிமூட்டம் எதிரொலியாக, தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் டிரோன் கேமரா மூலம் ராம்குமாரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
1,500 அடி பள்ளத்தில் உடல்
இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி மாலை, டிரோன் கேமராவை தாழ்வாக பறக்க விட்டு ராம்குமாரை தேடினர். அப்போது 1,400 அடி பள்ளத்தாக்கு பகுதியில், ராம்குமார் அணிந்திருந்த சட்டை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 7-ந்தேதியன்று வனத்துறையினர், மலையேற்ற குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் பள்ளத்தாக்கு பகுதியில் இறங்கி ராம்குமாரை தேடினர். சட்டை கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில், 1,500 அடி பள்ளத்தில் ராம்குமார் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
இருள் சூழ்ந்து அடா்ந்த பனிமூட்டம் நிலவியதாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தினாலும் உடலை மேலே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராம்குமாரின் உடலை கைப்பற்றி, அதனை சாக்குப்பை ஒன்றில் கட்டி வைத்து விட்டு மீட்புகுழுவினர் வட்டக்கானலுக்கு திரும்பினர்.
பாறையை துளையிட்டு ஏணி
இந்தநிலையில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் வனத்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் ம‌லையேற்ற‌க்குழுவின‌ர் 2 குழுக்களாக பிரிந்து உடலை மேலே கொண்டு வரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அதன்படி ஒரு குழுவின‌ர், 1500 அடி பள்ள‌த்தாக்கு ப‌குதிக்கு சென்று விட்டனர்.
ம‌ற்றொரு குழுவின‌ர், ரெட்ராக் மேல்புற‌ ப‌குதியில் நின்று பாறை ப‌குதியில் துளையிட்டு த‌ற்காலிக‌ ஏணி அமைத்தனர். பின்னர் அதன் மூலமாக ராட்ச‌த ‌க‌யிற்றில் ட‌ய‌ரை க‌ட்டி பள்ளத்தாக்கு பகுதிக்கு அனுப்பி வைத்த‌ன‌ர். ராட்ச‌த‌ க‌யிறுடன் கூடிய டயர் பள்ளத்தாக்கை சென்றடைந்தது.
5½ மணி நேரம் மீட்பு பணி
இதனையடுத்து பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த மீட்பு குழுவினர், சாக்குப்பையில் கட்டி வைத்திருந்த ராம்குமாரின் உடலை ராட்ச‌த‌ க‌யிற்றில் இணைத்து மேல் ப‌குதிக்கு அனுப்பும் ப‌ணியில் ஈடுப‌ட்ட‌ன‌ர்,
ராம்குமாரின் உடல், க‌யிற்றின் மூல‌ம் ச‌ரியாக‌ மேல்ப‌குதிக்கு செல்கிறதா? என்று டிரோன் கேமரா மூல‌ம் க‌ண்காணிக்கப்பட்டது. ரெட்ராக் மேல்ப‌குதியில் இருந்த‌ மீட்பு குழுவின‌ர், ராட்ச‌த‌ க‌யிற்றை மேல்புற‌மாக‌ இழுத்ததையடுத்து சாக்குப்பையில் கட்டப்பட்டிருந்த ராம்குமாரின் உடல் ரெட்ராக் மேல்ப‌குதிக்கு வ‌ந்த‌டைந்த‌து. அதன்பிறகே மீட்பு குழுவினர் நிம்மதி அடைந்தனர்.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில், காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பணி மாலை 4.30 மணி வரை நீடித்தது. இதனையடுத்து மீட்கப்பட்ட ராம்குமாரின் உடல், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்பி மோகத்தால், அபாயகரமான பள்ளத்தாக்கில் வாலிபர் தவறி விழுந்து உயிரை விட்ட சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்