தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்

Update: 2022-02-09 16:06 GMT
வெளிப்பாளையம்:-

இந்திய, இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர் மனோகரன், நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் துயர சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நேரத்தில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் இந்தியா, இலங்கை ஆகிய 2 நாட்டு மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை காணொலிக்காட்சி மூலமாக சமீபத்தில் நடந்தது. 
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க 2 நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். சென்னையில் காணொலிக்காட்சி மூலமாக நடந்து முடிந்த பேச்சுவார்த்தை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.  இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்