ராமேசுவரத்தில் கழுதைகளுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்

தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி ராமேசுவரத்தில் கழுதைகளுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம் நடந்தது.;

Update: 2022-02-09 15:16 GMT
ராமேசுவரம், 
தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி ராமேசுவரத்தில் கழுதைகளுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம் நடந்தது.
போராட்டம்
ராமேசுவரத்தில் நேற்று சி.ஐ.டி.யு. கடல் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீனவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் உமயவேல் தலைமை தாங்கினார்.
அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை வைத்து மீன் பிடிப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும், தடை செய்த வலைகள் மூலம் மீன்பிடிப்புக்கு துணை போகும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
கழுதைகளிடம் மனு
முன்னதாக கழுதைகளுக்கு மாலை அணிவித்து காதில் பூ சுற்றியபடி,  பஸ் நிலையத்தில் இருந்து மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழில் சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலக வாசலில் நின்றபடி மீனவர்கள் கோஷமிட்டனர்.
தங்கள் பிரச்சினை குறித்து அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக கூறி கழுதைகளுக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கடல்சார் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலை மீன் பிடிப்பு அதிகரித்துள்ளது. அதுபோல் கரையோரத்தில் விசைப்படகுகளில் மீன் பிடிப்பதும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த மீன்பிடிப்பை அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர்.
 ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடல் வளம் முழுமையாக அழிந்து வருகிறது. இதனால் நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் செய்யும் மீனவர்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினையில் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதுபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் கடல்சார் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சுடலை காசி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, பாம்பன் நாட்டுப் படகு மீனவர் சங்க தலைவர் முடியப்பன், ராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்