மாணவிக்கு பாலியல் தொல்லை
ஊட்டியில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.;
ஊட்டி
ஊட்டியில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-1 மாணவி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காந்தல் குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(வயது 21), லாரி டிரைவர். இவருக்கும், 16 வயது மதிக்கத்தக்க பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சஞ்சய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த மாணவியை அழைத்துக்கொண்டு ஊட்டியில் இருந்து கோவைக்கு சென்றார்.
போலீசில் புகார்
இதற்கிடையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவி, இரவு நேரமாகியும் திரும்பி வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
அப்போது லாரி டிரைவருடன் அந்த மாணவி கோவையில் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போக்சோவில் கைது
விசாரணையில் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று லாரி டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.