ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடக்கம்
ஊட்டியில் கோடை சீசனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ரோஜா பூங்காவில் 31,500 செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கி உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் கோடை சீசனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ரோஜா பூங்காவில் 31,500 செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கி உள்ளது.
ரோஜா பூங்கா
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 100-வது மலர் கண்காட்சியையொட்டி கடந்த 1995-ம் ஆண்டு ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. அங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4,201 வீரிய ரக ரகங்களை சேர்ந்த 31,500 ரோஜா செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2006-ம் ஆண்டு உலக ரோஜா சம்மேளனம், ஊட்டி ரோஜா பூங்காவிற்கு உலகளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை வழங்கி சிறப்பித்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிக ரகங்களை கொண்ட பூங்காவாக விளங்குகிறது.
கவாத்து செய்யும் பணி
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகள் தொடங்கியது.
இதனை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பணியாளர்கள் 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கவாத்து செய்த செடிகளில் இருந்த ரோஜா மலர்களை பணியாளர்கள் சேகரித்தனர்.
அதிகமாக பூக்கும்
பின்னர் தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி பூங்காவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா மலர்களை வழங்கினார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து செடிகளுக்கு இயற்கை உரம் இடப்பட்டு, மருந்து தெளித்து, களை எடுத்து பராமரிக்கப்படுகிறது.
கவாத்து செய்வதன் மூலம் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் அதிகமாக பூக்கும். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ஏப்ரல் மாதம் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். அவர்களது கண்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா, தோட்டக்கலை அலுவலர் மேனகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.