தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

Update: 2022-02-09 13:38 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்படுவதாகவும், மண்டல வாரியாக வாகன ரோந்துக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
மண்டல ரோந்து குழு
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு மண்டல அளவிலான ரோந்து வாகன குழு அமைக்கப்பட்டு உள்ளது. 
தூத்துக்குடி மாநகராட்சியில் 16 ரோந்து வாகன குழுவும், கோவில்பட்டி நகராட்சிக்கு 7 குழுவும், காயல்ட்டினம் நகராட்சிக்கு 3 குழுவும், திருச்செந்தூர் நகராட்சிக்கு 3 குழுவும், ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், எட்டயபுரம், கழுகுமலை, கானம், கயத்தாறு, பெருங்குளம், புதூர், சாத்தான்குளம், சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, உடன்குடி, விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகளுக்கு தலா ஒரு ரோந்து வாகன குழுவும், நாசரேத் பேரூராட்சியில் 2 குழுவும் ஆக மொத்தம் 48 மண்டல ரோந்து வாகன குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் மண்டல அலுவலராக மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழுவில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரும் இடம் பெற்று உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த மண்டல குழுவில் உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கவாத்து மைதானத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி தேர்தல் நேரத்தின் போது, அவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார். மேலும், அவர் கூறும் போது, இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் மணிமுத்தாறு, ராஜபாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் உள்பட 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்று கூறினார்.
கூட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தென்பாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்