அம்பத்தூரில் 1½ வயது ஆண் குழந்தை மாயம் - கடத்தப்பட்டதா?

கொரோனா ஊரடங்கில் பிறந்ததால் ‘லாக்டவுன்’ என செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்த 1½ வயது ஆண் குழந்தை மாயமானது. குழந்தை கடத்தப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-02-09 13:17 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர், காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகே புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (வயது 42), தன்னுடைய மனைவி புத்தினி (34) மற்றும் குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1½ வயது குழந்தையான ‘லாக்டவுன்’ ஆகியோருடன் அங்குள்ள குடிசை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

இதில் கடைசி குழந்தை, கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிறந்ததால் அதற்கு ‘லாக்டவுன்’ என செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மதியம் கிஷோர் தனது குடும்பத்தினருடன் தனது குடிசை வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் கண்விழித்து பார்த்தபோது தனது கடைசி மகன் ‘லாக்டவுன்’ மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தனது மனைவி புத்தினி மற்றும் கட்டிட என்ஜினீயர் முருகானந்தம் உதவியுடன் அந்த பகுதி முழுவதிலும் தேடியும் குழந்தையை காணவில்லை. எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி கமிஷனர் கனகராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் தனிப்படை அமைத்து மாயமான குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கிஷோருடன் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 4 பேர் திடீரென வெளியூர் சென்றதால், அவர்கள் குழந்தை ‘லாக்டவுனை’ கடத்திச்சென்று இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், சென்டிரல் ரெயில் நிலையம் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது அவர்கள் குழந்தையை கடத்தவில்லை என்பது தெரிந்தது.

அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் பகுதியில் கிஷோர் தங்கி இருந்த குடிசைக்கு மிக அருகில்தான் அம்பத்தூர் ஏரி உள்ளது. ஒருவேளை குழந்தை ஏரியில் தவறி விழுந்து இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார், அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ரப்பர் படகில் சென்று ஏரியில் தேடி வருகின்றனர்.

மேலும் உதவிக்கு ‘டைசன்’ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, குழந்தையை தேடி வருகின்றனர். கட்டிடத்தொழிலாளியின் குழந்தை ‘லாக்டவுனை’ யாராவது கடத்தினார்களா? அல்லது ஏரியில் தவறி விழுந்ததா? அல்லது குழந்தை எங்கு மாயமானது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகன் மாயமானதால் அவனது பெற்றோர் சோகத்தில் மூழ்கினர். அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டு வந்த சக தொழிலாளர்களையும் இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்