தேசியக்கொடியை அகற்றிவிட்டு காவிக்கொடி ஏற்றியவர்கள் தேசியம் பற்றி பேசுவதா?:கனிமொழி எம்பி
தேசியக்கொடியை அகற்றிவிட்டு காவிக்கொடி ஏற்றியவர்கள் தேசியம் பற்றி பேசுவதா என்று கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்
கோவில்பட்டி:
தேசியக்கொடியை அகற்றிவிட்டு காவிக்கொடி ஏற்றியவர்கள் தேசியம் பற்றி பேசுவதா? என்று கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகரசபையிலுள்ள 36 வார்டுகளிலும் போட்டியிடும் தி.மு.க. முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேற்று திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரசாரம் செய்தனர். அருகில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரிசையாக நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மதிக்கக்கூடியவர்
எந்த வாக்குறுதியாக இருந்தாலும் மக்களை மதிக்கக்கூடிய, தமிழகத்தின் உணர்வுகளை மதிக்கக்கூடிய முதல்-அமைச்சராக நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
நமது வீட்டுப்பிள்ளைகளுக்கு மருத்துவக்கல்வி பறிபோய் விடக்கூடாது, நமது உரிமை பறிபோய் விடக்கூடாது என்பதற்காக தமிழகத்திற்கு `நீட்' தேர்வு வேண்டாம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் நமது முதல்-அமைச்சர்.
கர்நாடக சம்பவம்
மதம் மற்றும் அடக்குமுறையின் பெயரால் கர்நாடகத்தில் கலவரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா காலடி வைக்கும் வாய்ப்பினை கொடுத்து விட்டால், தமிழகமும் கர்நாடக மாநிலம்போல் ஆகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இவர்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக்கூடாது. தமிழர்களாக நாம் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த பாதுகாப்பு உணர்வுடன் நாம் வாழ வேண்டும்.
தேசியக்கொடியை எடுத்துவிட்டு காவி கொடியை ஏற்றி அவமானப்படுத்தியவர்கள், தேசியம் பற்றி பேசுகிறார்கள். சுதந்திர போராட்ட வீரர்கள் பாரதியார், வ.உ.சி., வேலுநாச்சியார் புகைப்படங்கள் இடம்பெற்ற ஊர்தியை நிராகரித்து, அவர்கள் தங்களுக்கு யார் என்று தெரியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி அவமானப்படுத்தி உள்ளனர்.
பாலம்
பா.ஜனதாவினரும், அ.தி.மு.க.வினரும் தமிழ்நாட்டுக்கு அவமானத்தையும், கேடையும் விளைவிக்கக்கூடியவர்கள். மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் பாலமாக இருக்கக்கூடிய நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வக்கீல் அழகுமுத்து பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.