கோயம்பேடு பஸ் நிலையத்தில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-02-09 13:05 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அந்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார். அவரது தலையில் கல்லைப்போட்டு கொன்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையானவர் பெயர் சக்தி (வயது 35) என்பதும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு அவர், தனது நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சக்தி தலையில் கல்லை தூக்கிப்போட்டு விட்டு தப்பிச்சென்றதும், அதில் படுகாயம் அடைந்த சக்தி பரிதாபமாக இறந்ததும் தெரிந்தது.

சக்தியை கொலை செய்த நண்பர்கள் யார்? என்பது குறித்தும், அவரது கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பாபு (40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி மெர்சி (38). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். மெர்சியின் தம்பி சீனிவாசலுவின் மகளுக்கு வருகிற 11-ந் தேதி திருமணம் என்பதால் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர பாபு வீட்டில் திருமண சடங்குகள் நடைபெற்றது. இதில் மெர்சியின் அக்காள் ருத்ரம்மாவின் மருமகன் டிரைவர் சதீஷ் (30) என்பவரும் கலந்து கொண்டார்.

அப்போது மது போதையில் இருந்த ராஜேந்திர பாபு, தனது மனைவி மெர்சிக்கும், சதீசுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி உறவினர்கள் முன்னிலையில் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ராஜேந்திர பாபு, சதீஷ் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திர பாபு நள்ளிரவில் மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார், ராஜேந்திரபாபு குடிபோதையில் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் நடத்திய விசாரணையில் சதீசுக்கும், ராஜேந்திரபாபுவுக்கும் ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த ராஜேந்திரபாபு உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்