“தமிழகத்தில் பல இடங்களில் தாமரை மலர்ந்து கொண்டு இருக்கிறது” - அண்ணாமலை

தமிழகத்தில் பல இடங்களில் தாமரை மலர்ந்து கொண்டு இருக்கிறது என்று நெல்லையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

Update: 2022-02-08 21:50 GMT
நெல்லை:.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நெல்லையில் நடந்தது. 

அறிமுக கூட்டம்

மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கணேசமூர்த்தி, பார்வையாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய எழுச்சி

பா.ஜனதாவிற்கு புதிய எழுச்சி கிடைத்துள்ளது. கொலுசு தொழிலுக்கு என பெயர் பெற்ற சேலம் மாநகரில் அந்த தொழில் செய்ய முத்ரா திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் கடன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் லட்சக்கணக்கான தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கொரோனா கால கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு மூலம் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

பாராளுமன்றத்தில் 2 எம்.பி.க்கள் மட்டுமே இருந்த பா.ஜனதா 20 ஆண்டுகளில் 303 எம்.பி.க்களையும், 3,300 எம்.எல்.ஏ.க்களையும் கொண்டுள்ளது. நாட்டிலேயே அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் கட்சியாக உள்ளது.

அதிக எம்.எல்.ஏ.க்கள்

உள்ளாட்சி தேர்தலில் எங்கெல்லாம் பா.ஜனதா வெற்றி பெற்றதோ அங்கெல்லாம் அதிக எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருமே வருங்கால தலைவர்களாக உருவெடுக்க உள்ளனர். இங்கு மட்டும் தான் முதுமைக்கும், இளமைக்கும், அனுபவத்திற்கும் மரியாதை அளிக்கப்படும். வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

இந்த கட்சியில் தவறான வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 12,838 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் யாரும் அரசின் ஒரு பைசாவை கூட எடுத்தவர்கள் இல்லை.

நீட் தேர்வு

மக்கள் முகத்தை பார்க்க முடியாமல், களத்திற்கு வராமல் கம்ப்யூட்டரில் முதல்வர் பிரசாரம் செய்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆணவ படுகொலை அதிகரித்து விட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய கம்ப சூத்திரம் இருப்பதாக சொன்ன உதயநிதி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நிலையில் துபாயில் உள்ளார். தி.மு.க. அரசு மக்கள் நலனுக்கான அரசு அல்ல. நீட் தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர் கடிதம் எழுதிய 12 நபர்களும் அவருக்கு பதில் அளிக்கவில்லை. நீட் மூலமாக ஏழை-எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 70 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடம் 2,300. ஆனால், 8 ஆண்டுகளில் மருத்துவம் பயில 2,500 இடங்கள் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தாமரை 

ராகுல்காந்தி பிரதமர் மோடியை பற்றி பேசிய போதெல்லாம் அதிகப்படியான இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ராகுல்காந்தி தமிழகத்தில் பா.ஜனதா வரமுடியாது என சொன்னதில் இருந்து தமிழக பா.ஜனதாவிற்கு சுக்கிர திசை அடித்துள்ளது. வேட்பாளர்கள் போட்டியின்றி பல உள்ளாட்சிகளில் தேர்வாகி உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூ.வில் உள்ள நோயாளி. தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் இயங்குகிறது. தமிழகத்தில் பல இடங்களில் தாமரை மலர்ந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






மேலும் செய்திகள்