ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக வழக்கு - பசவராஜ் பொம்மை அறிவிப்பு

ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2022-02-08 21:50 GMT
பெங்களூரு:

ஒகேனக்கல் 2-வது குடிநீர் திட்டம்

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் வழக்குகளின் நிலை குறித்து சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், கர்நாடகம் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  நிலம், நீர், மொழி விஷயத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளன. மேகதாது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அங்கு கர்நாடகத்தின் நிலைப்பாட்டை எடுத்து கூற உள்ளோம். தமிழக அரசு ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் காவிரி-குண்டாறு-வைகை நதிகள் இணைப்பு திட்டங்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகம் தனது எதிர்ப்பை தெரிவிக்கும்.

மத்திய நீர் ஆணையம்

  கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டின் 2-வது தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை அரசிதழில் வெளியிட உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அதில் இருந்து விலகியுள்ளார். அதனால் வேறு ஒரு நீதிபதியை நியமிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். மேகதாது திட்டம் தொடர்பாக மத்திய நீர் ஆணையம் மற்றும் காவிரி நிர்வாக ஆணையத்தின் கர்நாடகம் தனது நிலையை தெளிவுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்க வேண்டும்.

  மகதாயி நதி நீர் பங்கீடு பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டுள்ளோம். மகதாயி தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளன. ஆற்றை திருப்பும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு அனுமதி கிடைத்தால் பணிகள் தொடங்கப்படும்.

நதிகள் இணைப்பு

  வரும் நாட்களில் நீர்ப்பாசன திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது, கோர்ட்டுகளில் வழக்குகள் எந்த நிலையில் உள்ளன, ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு பெற்றுள்ளோம்.

  கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு நதிகள் இணைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கர்நாடகம் உள்ள பிற மாநிலங்களின் பங்கை உறுதி செய்த பிறகே திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்து நிதித்துறை மந்திரியிடம் எடுத்து கூறியுள்ளேன்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்