விஸ்வரூபம் எடுக்கும் பர்தா விவகாரம்: கர்நாடகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை
கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். போலீஸ் தடியடி நடத்தினார்கள். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.;
பெங்களூரு:
பர்தா விவகாரம்
கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ (பர்தா) அணிந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மதத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் காவி துண்டை அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். இதேபோல், மாநிலம் முழுவதும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து கல்லூரிக்கு வர தொடங்கினார்கள்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்றும், உடை அணிவதில் கட்டுப்பாடு விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில அரசின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு 8-ந்தேதி (அதாவது இன்று) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை
இந்த நிலையில் கடலோர மாவட்டங்களை ெதாடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வருகிறார்கள். இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பா அரசு கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்தும், இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்தும் வந்தனர். இரு தரப்பினரும் கல்லூரி எதிரே திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அந்த சமயத்தில் இந்து மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு முஸ்லிம் மாணவ-மாணவிகளும் பதிலுக்கு ேகாஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு இருதரப்பினருக்கு இடையே ேமாதல் ஏற்பட்டது. சாலையில் சென்ற பஸ் மீதும் கல்வீசி தாக்கினர். இதில் 2 பேரின் மண்டை உடைந்தது. மாணவர்களின் மோதல் வன்முறையாக வெடித்தது.
அங்கிருந்த வாகனங்களையும் தாக்கினார்கள். இதில் 5 வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் போலீசார் தடியடி நடத்தினார்கள். ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால் கண்ணீர் புகைக்குண்டு வீசி அவர்களை கலைத்தனர்.
பாகல்கோட்டை, உடுப்பி
இதேபோல், பாகல்கோட்டை மாவட்டம் பெரப்பனபட்டியில் தனியார் மற்றும் அரசு கல்லூரியிலும் பர்தா அணிந்து வந்த மாணவிகளுக்கு போட்டியாக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர். மேலும் இருதரப்பு மாணவர்களும் மாற்றி, மாற்றி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது இருதரப்பு மாணவர்கள் இடையேயும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதுடன், கல்வீசியும் தாக்கினர். இந்த கல்வீச்சு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா, மணிப்பாலில் நேற்று பர்தா அணிந்து வந்த முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு மற்றும் தலைப்பாகை அணிந்து வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்து மாணவர்கள் சாலையில் ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஹரஹர மகாதேவ்’ என்று கோஷமிட்டப்படி சென்றனர்.
போலீஸ் தடியடி
மேலும் தாவணகெரே மாவட்டம் ஹரிகரா பகுதியில் உள்ள கல்லூரியிலும் பர்தா, காவி உடை அணிந்து வந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி மாணவ-மாணவிகளை விரட்டியடித்தனர்.
இதேபோல், சிக்கமகளூரு, மண்டியா, விஜயாப்புரா, குடகு, பீதர், துமகூரு, உப்பள்ளி, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களிலும் பர்தா, காவி உடை அணிந்து வரும் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் இடையே மோதல் உண்டானது. அந்தந்த பகுதிகளில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர். இதனால் கர்நாடகத்தில் பர்தா விவகாரம் தற்போது கொழுந்து விட்டு எரிகிறது.
144 தடை உத்தரவு
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு பர்தா, காவி உடை அணிந்து வருவது தொடர்பாக மாணவர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் தாவணகெரே மாவட்டம் ஹரிகரா, சிவமொக்கா மாவட்டத்தில் சிவமொக்கா நகர், சிகாரிப்புரா, உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா, மணிப்பால் ஆகிய பகுதிகளில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று சிவமொக்கா நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த மோதல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் 3 நாட்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டம் உள்பட பதற்றமான பகுதிகளில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய கொடியை இறக்கி காவி கொடியை ஏற்றிய மாணவர்கள்
கர்நாடகத்தில் பர்தா, காவி உடை அணியும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிவமொக்கா டவுன் பி.எச். சாலையில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியிலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இந்து மாணவர்கள், கல்லூரியில் உள்ள கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடியை அவிழ்த்து கீழே இறக்கிவிட்டு அதற்கு பதிலாக காவி ெகாடியை ஏற்றினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தடியடி நடத்தி விரட்டி, காவி கொடியை அகற்றி மீண்டும் தேசிய கொடியை ஏற்றினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து மாணவர்களுக்கு எதிராக ஒற்றை ஆளாய் கோஷம் எழுப்பிய முஸ்லிம் மாணவி
மண்டியா நகரில் உள்ள பி.இ.எஸ். கல்லூரியில் பர்தா அணிந்து வரும் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். மேலும் அவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒன்று திரண்டு, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது பர்தா அணிந்து கொண்டு ஸ்கூட்டரில் கல்லூரிக்கு வந்த மாணவியை பார்த்ததும் அவர்கள் பலமாக கோஷம் எழுப்பினர். ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வந்த அந்த முஸ்லிம் மாணவி, அங்கு திரண்டிருந்த இந்து மாணவர்களை பார்த்து ஒற்றை ஆளாய் எதிர்த்து அவர்கள் முன்னிலையில் ‘அல்லா கூ அக்பர்’ என்று பலமாக கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பேராசிரியர் ஒருவர் அந்த மாணவியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பர்தா, காவி துண்டு அணியும் விவகாரத்தில் சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் கர்நாடகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "பர்தா அணியும் விவகாரத்தில் இன்று (நேற்று) சில கல்வி நிறுவனங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் கர்நாடகத்தில் நாளை (அதாவது இன்று) முதல் 3 நாட்களுக்கு பி.யூ.கல்லூரிகள் மற்றும் முதல்நிலை டிகிரி கல்லூரிகள் மூடப்படும். இதேபோன்று பள்ளியை பொறுத்தவரையில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை மாணவர்கள் அமைதி காக்க வேண்டும்" என்றார்.