பர்தா அணியும் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை அரசு ஏற்கும் - பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் பர்தா அணியும் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை அரசு ஏற்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பசவராஜ்பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் பர்தா அணியும் விவகாரத்தில் பள்ளி-கல்லூரிகளில் நேற்று சிவமொக்கா, பாகல்கோட்டை, தாவணகெரே பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கு
பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரும் விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. அதனால் இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அரசு ஏற்கும். அதுவரை மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். மாணவர்கள் யாருடைய தூண்டுதலுக்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும். யாரும் தேவையின்றி மாணவர்கள் கல்வி கற்க இடையூறாக இருக்க வேண்டாம்.
பர்தா விவகாரத்தில் கேரளா, சென்னை, மும்பை ஐகோர்ட்டுகள் ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளன. கர்நாடக ஐகோர்ட்டு இன்னும் 2, 3 நாட்களில் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். மாணவர்களை தூண்டிவிடும் வகையில் யாரும் கருத்துகளை கூறக்கூடாது. இது உணர்வுபூர்வமான விஷயம். 2, 3 இடங்களில் மோதல் நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கல்லூரிகளை மூடும்படி...
பதற்றமான நிலையில் உள்ள பள்ளி-கல்லூரிகளை மூடும்படி உத்தரவிட்டுள்ளேன். மாணவர்கள் மீண்டும் ஒரே வகுப்பில் அமர்ந்து பாடம் கற்க வேண்டி இருக்கிறது. அதனால் யாரும் மோதலில் ஈடுபட வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். அனைவரும் அமைதி-நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
பள்ளி-கல்லூரி மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று அரசு தெளிவாக உத்தரவிட்டுள்ளது. கர்நாடக கல்வி சட்டத்தின் அடிப்படையில் தான் இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அரசு சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படுகிறது. கல்வி நிறுவனங்கள் நிர்வாகம் மற்றும் அவற்றின் வளர்ச்சி குழு இணைந்து சீருடை குறித்து முடிவு செய்கிறது. நதிகள் இணைப்பு திட்டத்தில் கர்நாடகத்திற்கு எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.