மைசூருவில் 125 ஆண்டு பழமையான அரசு பள்ளி கட்டிடம் இரவோடு இரவாக இடித்து அகற்றம்

மைசூருவில் கடும் எதிர்ப்பை மீறி 125 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளி கட்டிடம் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது. அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Update: 2022-02-08 21:30 GMT
மைசூரு:

விவேகானந்தர் நினைவு மண்டபம்

மைசூரு நகரம் நாராயண சாஸ்திரி ரோட்டில் என்.டி.எம்.எஸ். எனும் பெயரில் அரசு பள்ளிக்கூடம் இருந்தது. இந்த பள்ளிக்கூடம் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதாவது, மைசூருவை ஆண்ட மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அவரது தாய் கெம்ப

  நஞ்சம்மண்ணி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பள்ளியை ஒட்டி பகுதி மைசூரு திவானான பூர்ணய்யா என்பவரின் வீடு உள்ளது. அப்போது விவேகானந்தர், பூர்ணய்யாவை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் நினைவு கூறும் வகையில் அவரது வீட்டையொட்டிய பகுதியில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு பள்ளிக்கூடத்தில் சில ஆண்டுகளாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

ஐகோர்ட்டில் வழக்கு

  இதைதொடர்ந்து விவேகானந்தர் அறக்கட்டளை, மாணவர்களை அருகே உள்ள பள்ளியில் சேர்த்து அரசு பள்ளிக்கூட கட்டிடத்தை இடித்து விவேகானந்தர் மண்டபத்தை அகலப்படுத்த நிலத்தை வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி அரசு பள்ளி கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  ஆனால் மாணவ அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டங்களும் நடைபெற்றன. அத்துடன் இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இரவோடு இரவாக இடித்து அகற்றம்

  இதையடுத்து விசாரணை நடத்திய ஐகோர்ட்டு அரசு பள்ளியை இடித்து அகற்றி விவேகானந்தர் அறக்கட்டளைக்கு ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மாநகராட்சி அதிகாரிகள் அரசு பள்ளி கட்டிடத்தை இரவோடு இரவாக இடிக்க திட்டமிட்டனர்.

  அதன்படி நேற்றுமுன்தினம் இரவோடு,இரவாக 125 ஆண்டு பழமையான பள்ளிக் கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடிக்கும் பணி நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

வாக்குவாதம்-பரபரப்பு

  இதையறிந்து மாணவர்கள், கன்னட அமைப்பினர் உள்ளிட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அரசு பள்ளிக் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

  மேலும் அதிகாரிகளுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்