தோஷத்திற்கு பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ்

திருமங்கலம் அருகே தோஷத்திற்கு பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் 11 பவுன் நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-02-08 21:11 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அருகே தோஷத்திற்கு பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் 11 பவுன் நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தோஷத்திற்கு பரிகாரம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை அடுத்த போல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவருடைய மனைவி முருகேஸ்வரி(வயது 31). முத்துக்காளை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவர் முருகேஸ்வரியிடம் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறினார். 
இதைதொடர்ந்து அதற்கான பூஜையையும் முதியவர் செய்துள்ளார். அவர் வீட்டில் இருக்கும் நகை, பணத்தை பூஜையில் வையுங்கள் எனக் கூறினார். இதனை நம்பிய முருகேஸ்வரி வீட்டில் இருந்த நகை, பணத்தை கொண்டு வந்து கொடுத்தார். அதனை மஞ்சள் துணியில் சுற்றி பூஜையில் முதியவர் வைத்துள்ளார். பின்னர் முருகேஸ்வரி அசந்த நேரத்தில் அவர் நகை,  பணத்தை எடுத்துக்கொண்டு மாயமாகி விட்டார். 
புகார்
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் முருகேஸ்வரி புகார் செய்தார். 11 பவுன் நகை மற்றும் 1500 ரூபாயை முதியவர் ஒருவர் நூதன முறையில் ஏமாற்றி திருடிச் சென்றதாக புகார் தெரிவித்தார். அதன் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்