கோவிலை இடிக்கக்கூடாது என கோஷமிட்ட பொதுமக்களால் பரபரப்பு

கோவிலை இடிக்கக்கூடாது என கோஷமிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-08 20:14 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளது என்றும், சாலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்றும், எனவே அதனை அகற்ற வேண்டும் என்றும் கூறி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் பெரியசாமிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இந்த நோட்டீசை தொடர்ந்து, அந்த கோவிலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு கோவிலின் அறங்காவலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலை இடிக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து, மேலும் 15 நாட்களுக்குள் கோவிலை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து அயன்பேரையூர் கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கோவில் முன்பு கூடி கோவிலை இடிக்கக்கூடாது என்று கூறி கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்