திருப்பத்தூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகள் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி, காணிநிலம் முனிசாமி, ஆசிரியர் அருணாசலம், வேந்தன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் பழங்கற்கால கருவிகளான கற்கோடாரிகளை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து மோகன்காந்தி கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டதிற்கு உட்பட்ட ஜவ்வாதுமலையிலுள்ள புதூர் நாட்டிற்கு அருகே உள்ளது வழுதலம்பட்டு சிற்றூர். இவ்வூரில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வேப்பமரத்தடியில் கருநிறத்தில் வழவழப்பான 10-க்கும் மேற்பட்ட சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய கற் கோடாரிகள் கண்டறியப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித குடியேற்றம் இருந்ததை இதன் மூலம் அறியமுடிகிறது.
இந்தக் கற்கோடாரிகள் மலை மக்களால் பிள்ளையாரப்பன் என்னும் பெயரோடு வணங்கப்படுகின்றன. தங்களின் காட்டு வழிப்பயணத்தின் போது பிள்ளையாரப்பன் தங்களுக்கு வழித்துணையாக வரும் என்று மக்கள் நம்புகின்றனர். கற்கோடாரிகள் இரும்பால் செய்யப்படுகின்ற கோடாரியைப் போல கூர்மையாக இருக்கும். வழுதலம்பட்டை அடுத்துள்ள சாமிபாறையின் உச்சியில் மூன்று கற்கோடாரிகள் உள்ளன. இதே பகுதியில் பெருமாள் பாதம் என்ற இடத்தின் அருகாமையிலும் மூன்று கற்கோடாரிகள் உள்ளது. இவை ஜவ்வாதுமலையின் தொன்மையைப் பறைசாற்றும் ஆவணங்களாகும் என கூறினார்.