ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Update: 2022-02-08 18:49 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தேர்தல் பொது பார்வையாளர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும்பணி ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

 அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்த இந்த பணியை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி) மரியம் ரெஜினா மற்றும் நகர்ப்புற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சின்னம் பதிக்கும் பணி

ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் நேற்று சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டு, அவைகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சின்னங்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை, சோளிங்கர், வாலாஜா ஆகிய 6 நகராட்சிகள், அம்மூர், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளில் 411 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 491 கட்டுப்பாட்டு கருவிகளும், 491 வாக்குப்பதிவு எந்திரங்களும், பயன்படுத்தப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் மையம்

ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் மேல்விஷாரம் ஆகிய 5 நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. அங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை‌ மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இக்கல்லூரியில் பிரதான கட்டிடம் தரைத்தளத்தில் வாலாஜா நகராட்சி மற்றும் ராணிப்பேட்டை நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கட்டிட தரைத்தளத்தில் ஆற்காடு நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்தின் தரைத்தளத்தில் மேல்விஷாரம் மற்றும் சோளிங்கர் நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் பொது பார்வையாளர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி

தொடர்ந்து ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் தரைத்தளத்தில் தக்கோலம், பனப்பாக்கம், நெமிலி, காவேரிப்பாக்கம் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், முதல் தளத்தில் அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதை தேர்தல் பொது பார்வையாளர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்