57 மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 57 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.

Update: 2022-02-08 18:29 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 57 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.

கலந்தாய்வு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடிப்படையில் தேர்வானவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது.
இதில் தேர்வானவர்களுக்கு உரிய கல்லூரிகளில் சேர்க்கை பணி தொடங்கியது.இதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6 பேரும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 4 பேரும் என மொத்தம் 10 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர் இதைத்தொடர்ந்து பொது பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது.

சான்றிதழ் சரிபார்ப்பு

இதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 57 மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதற்காக நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் துணை முதல்வர் டாக்டர் அன்பரசி தலைமையில் மருத்துவ குழுவினர் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் 57 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு தங்களின் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.இவற்றை அடிப்படையாக வைத்தும் அவர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களோடு ஒப்பிட்டு அதன் உண்மை தன்மையை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து இவர்கள் விரைவில் தங்களுக்கான மருத்துவ கல்லூரியை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்