ரூ.6¼ லட்சம் மோசடி செய்தவர் கைது

மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.6¼ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-02-08 17:53 GMT
வேதாரண்யம்:
மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.6¼ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.10 லட்சம் வசூல்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமம் சின்னகுட்டி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 60). விவசாயி. இவர், நாலுவேதபதி பகுதியில் உள்ள ஒரு சில நபர்களை மலேசியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதற்காக கூறி அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வசூல் செய்து சென்னை ராமாபுரம் பஜனை கோவில் தெருவைச்சேர்ந்த ராமலிங்கம்(40) என்பவரிடம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இருவரை மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி உள்ளார். மீதம் உள்ளவர்களை மலேசியாவுக்கு அனுப்பவில்லை. மேலும் அவர்கள் கொடுத்த ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்தை திருப்பி தரவில்லை. பல முறை கேட்டும் ராமலிங்கம் பணம் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
கைது
இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் குற்ற புலனாய்வு துறையில் தமிழ்ச்செல்வன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாகை குற்றபுலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த ராமலிங்கத்தை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கத்தின் மனைவி சித்ரா மற்றும் டிராவல்ஸ் பணியாளர் வெங்கடேஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்