சேந்தமங்கலத்தில் திருமணமான 8-வது மாதத்தில் 17 வயது சிறுமி தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
சேந்தமங்கலத்தில் திருமணமான 8-வது மாதத்தில் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.
சேந்தமங்கலம்:
17 வயது சிறுமி
சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி ஒருவரின் 17 வயது மகள். இந்த சிறுமிக்கும், பாண்டமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்தி (வயது 32) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு வந்தார். மேலும் அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமி அங்குள்ள தோட்டம் ஒன்றில் மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சேந்தமங்கலம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
சிறுமி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் தற்கொலை குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளாவும் விசாரித்து வருகிறார்.
சேந்தமங்கலத்தில் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.