டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி சாவு

முத்துப்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-08 17:23 GMT
முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். 

டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை எம்.கே. நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் சீதாராமன் (வயது 22). தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் டிராக்டரில் வைக்கோலை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டு இருந்தார். 
அப்போது டிராக்டரின் டிரைவர் சீட் அருகே அவர் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் டிராக்டர் டிரைவர் திடீர் என்று பிரேக் போட்டுள்ளார். அப்போது, சீதாராமன் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

உடல் நசுங்கி சாவு

இதில் டிராக்டரின் பின் பகுதி டிப்பர் மேலே ஏறியதில் சீதாராமன் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சீதாராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீதாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். டிராக்டர் டிரைவர் அந்த பகுதியை சேர்ந்த கலைச்செல்வனை(32) போலீசார் கைது செய்தனர். 
வாலிபர் ஒருவர் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து உடல் நசுங்கி பலியானது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்