சாலையின் குறுக்கே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் போராட்டம்
கோட்டூர் அருகே கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலையின் குறுக்கே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்:-
கோட்டூர் அருகே கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலையின் குறுக்கே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பா சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஒரத்தூர் கிராமத்தில் 750 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஒரத்தூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஒரத்தூர் மாரியம்மன் கோவில் திடலில்(வழக்கமாக அரசு கொள்முதல் நிலையம் செயல்படும் இடம்) வைத்துள்ளனர். இங்கு 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன.
போராட்டம்
இந்த நிலையில் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம பொது நலகமிட்டி சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளரிடம் ஒரு வாரத்துக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. ஆனால் கொள்முதல் நிலையத்தை திறந்து கொள்முதல் பணிகளை தொடங்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒரத்தூர் பஸ் நிறுத்தம் அருகே மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையின் குறுக்கே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் சவுந்தரராஜன், கிராம பொதுநல கமிட்டி தலைவர் ஸ்டாலின் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
ஒரத்தூரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும். ஒரத்தூர் கிராமத்தில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து கொள்முதல் பணிகளை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, களப்பால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரசு மற்றும் போலீசார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
விவசாயிகளின் போராட்டம் காரணமாக மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.