85 மூடை ரேஷன் அரிசியுடன் 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி மற்றும் விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் 2 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

Update: 2022-02-08 17:07 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி மற்றும் விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் 2 ஆயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். 
வேனில் கடத்தல் 
வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதியில் உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரைட்மேரி தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 30 கிலோ கொண்ட 80 மூடை ஆக மொத்தம் 2 ஆயிரத்து 400கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
 அதனை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த மதுரை கீரைத்துறையை சேர்ந்த வேன் டிரைவர் திருப்பதி (வயது30) மற்றும் ரேஷன் அரிசி கடத்திய கணேசன் (52) மற்றும் உதவியாளர் வத்திராயிருப்பை சேர்ந்த முத்தையா (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 பதுக்கல்
இதேபோன்று விருதுநகர் பாண்டியன் நகர் தங்கமணி காலனியில் முனியப்பன் (61) என்பவர் தனது அரிசி ஆலையில் 200 கிலோ ரேஷன் அரிசியை 5 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தார். ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்