கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

காரமடை நகராட்சியில் 10-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளார்கள்.

Update: 2022-02-08 17:06 GMT
காரமடை

காரமடை நகராட்சியில் 10-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால்  வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளார்கள்.

பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் 10-வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா நகர் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குடியிருப்புகளில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்துவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். 
இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட காரமடை நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தற்போது காரமடை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார்கள். மேலும், தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவலறிந்த காரமடை நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், வட்டார தேர்தல் பார்வையாளர் ரத்தனா, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், காரமடை சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் அங்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காரமடை நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் பேசுகையில், கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் காரமடை பேரூராட்சியை தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து சமாதானமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுள்ள கருப்புக் கொடிகளை அகற்றினர். இ்ந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்