பொள்ளாச்சியில் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு

பொள்ளாச்சியில் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Update: 2022-02-08 16:51 GMT
சுல்தான்பேட்டை

பொள்ளாச்சியில் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். 

கறிக்கோழி கொள்முதல்

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.90 முதல் 93 வரை செலவாகிறது. இந்தநிலையில், தற்போது, பண்ணைக் கொள்முதல் விலை (விற்பனை விலை) கிலோ ரூ.94 ஆக உள்ளது. 

விலை உயர்வு

இதனிடையே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பல கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர். மேலும், வேட்பாளர்கள் பலர் தங்களுடன் வாக்கு சேகரிக்க வருபவர்கள், களத்தில் தங்களுக்கு உதவுபவர்களை உற்சாகப்படுத்த சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 போன்றவைகளை தங்கள் வீடுகளில் தயாரித்தோ அல்லது ஒட்டல்களில் ஆர்டர் செய்தோ வழங்கி வருகிறார்கள். 
இதன் காரணமாக தமிழகத்தில் வழக்கத்தைவிட கறிக்கோழி நுகர்வு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கார்த்திகை, தை மாதங்களில் மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் விரதத்தை முடித்து உள்ளார்கள். தற்போது அவர்களும் கறிக்கோழியை நாடி வருகிறார்கள். இதனால் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்