ஓசூர் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ஓசூர் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
ஓசூர் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ரெயில் முன் பாய்ந்த வாலிபர்
ஓசூர் அருகேயுள்ள சின்ன வேடகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவருடைய மகன் வேலு (வயது 20). கடந்த சில மாதங்களாக வேலு, மனரீதியான பாதிப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர், டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தனர். இந்தநிலையில், கொத்தப்பள்ளி கிராமத்திலிருந்து வேலுவும், அவரது சகோதரர் பிரபு மற்றும் நண்பர் மணி ஆகியோர் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அப்போது ஓசூரிலிருந்து கொத்தப்பள்ளி வழியாக சேலம் நோக்கி சென்ற ரெயில் முன்பு வேலு திடீரென பாய்ந்துவிட்டார். இதில் அவரது இடது கை துண்டானது. மேலும் உடலில் படுகாயம் ஏற்பட்டது.
பரிதாப சாவு
அந்த பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓசூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.