கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கணினி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தேனி:
735 வாக்குச்சாவடிகள்
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், நகராட்சிகளில் 2 பேரும், பேரூராட்சிகளில் 5 பேரும் என மொத்தம் 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால், மீதமுள்ள 506 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 1,960 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலுக்காக மாவட்டத்தில் நகராட்சிகளில் 365 வாக்குச்சாவடிகள், பேரூராட்சிகளில் 377 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 742 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், அந்த 7 வார்டுகளில் அமைந்துள்ள 11 வாக்குச்சாவடிகள் தவிர மீதமுள்ள 735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் பார்வையாளர் சங்கர், மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் இந்த கணினி குலுக்கல் நடந்தது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் வார்டு வாரியாக ஒதுக்கப்பட்டன. 735 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் இருப்பு அடிப்படையில் மொத்தம் 886 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 886 கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தங்கராஜ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.