பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர தீ விபத்தில் வெல்டிங் தொழிலாளி படுகாயம்
பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர தீ விபத்தில் வெல்டிங் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
சிவகாசி,
பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர தீ விபத்தில் வெல்டிங் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
பட்டாசு ஆலையில் தீ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமாரி. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ளது. இங்கு வழக்கம் போல் நேற்று பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. 25 பணியாளர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது அதே பட்டாசு ஆலையின் மற்றொரு பகுதியில் காகித குழாய்களை இருப்பு வைக்க தகர செட் அமைக்கப்பட்டு வந்தது. இதற்கான பணியில் ராஜபாளையத்தை சேர்ந்த மாரீசுவரன் (வயது29) என்ற வெல்டிங் தொழிலாளி ஈடுபட்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெல்டிங் தீப்பொறி அருகில் இருந்த பட்டாசு திரியின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தீப்பிடித்து பரவியது. மாரீசுவரன் படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெரும் விபத்து தவிர்ப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பட்டாசு ஆலையில் தனியாக உள்ள இடத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த பட்டாசு ஆலையை பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தனி தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.