விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

Update: 2022-02-08 16:05 GMT
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர். 
பேச்சுவார்த்தை
ஒப்பந்தபடி கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி  திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் கடந்த மாதம்  9ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
 வேலை நிறுத்த போராட்டம் காரணாக  5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதுவரை ரூ.3,100 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று  நடந்தபேச்சுவார்த்தையில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம் , சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாகவும், பிறகு சுமார் 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படுமென இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இதனை ஒப்பந்தம் செய்து கொண்டு கையெழுத்து இடுவதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் முரண்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் கூலி உயர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து நடைபெறும்.
 இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்