3 மாதங்களாக 69 அடியில் நீடிக்கும் வைகை அணை
நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் 3 மாதங்களாக வைகை அணை நீர்மட்டம் 69 அடியிலேயே நீடிக்கிறது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டில் 3 முறை நிரம்பியது.
அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதுதவிர உசிலம்பட்டி பகுதி கண்மாய்களுக்கு 3 மாதங்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
69 அடியாக நீடிப்பு
தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு தொடர் நீர்வரத்தாக உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69.08 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 317 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 219 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதும், போதுமான நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் குறையவே இல்லை.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி முதல் தற்போது வரை 3 மாதங்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 69 அடியில் நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் குறையாமல் இருப்பதால் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.