வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருச்செந்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்;
திருச்செந்தூர்:
காயல்பட்டினத்தை சேர்ந்த பக்கீர் முகைதீன் மகன் அப்துல் காதர் (வயது 36). இவர் இரவு திருச்செந்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். வீரபாண்டியன்பட்டினத்தை கடந்து சென்றபோது ஒரு சிறுவன் உள்பட 2 பேர் அவரை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளனர். அப்துல் காதர், 2 பேரையும் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும் அந்த 2 பேரும் அப்துல் காதரை வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அப்துல் காதர் தர மறுக்கவே பீர் பாட்டிலால் தலையில் தாக்கி விட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்து 620 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி (23), வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.1,900-த்தையும் பறிமுதல் செய்தனர்.