மனைவிக்கு வாக்களிக்கும்படி கத்தியை காட்டி மிரட்டி ஓட்டுகேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது
மனைவிக்கு வாக்களிக்கும்படி கத்தியை காட்டி மிரட்டி ஓட்டுகேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சுயேச்சையாக போட்டி
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 42). காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் நகர எஸ்.சி. எஸ்.டி. பிரிவு துணைத்தலைவராக இருந்தவர். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் போட்டியிட காங்கிரஸ் மேலிடத்தில் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பூபாலன், தனது மனைவி தனலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட களம் இறக்கினார்.
கைது
வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூபாலன் 1-வது வார்டில் உள்ள பொதுமக்களிடம் சுயேச்சையாக போட்டியிடும் தனது மனைவி தனலட்சுமிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி கத்தியை காட்டி மிரட்டினார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பூபாலனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.