மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் சாவு
மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் உயிரிழந்தார்.;
ஜெயங்கொண்டம்:
ஓட்டல் ஊழியர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடுகபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு தண்டபாணி(வயது 32), ரவி என 2 மகன்கள் உண்டு. இதில் ரவி வெளியூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். மல்லிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் தண்டபாணி ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கேயே தங்கி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்தபின்னர், ஓட்டலின் மேல் மாடியில் உள்ள தனது அறைக்கு அவர் சென்றுள்ளார்.
மின்சாரம் பாய்ந்து சாவு
அங்கு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றி கையை கழுவியபோது எதிர்பாராதவிதமாக கீழே சென்ற உயரழுத்த மின் கம்பியில் தண்ணீர் பட்டு, அதில் இருந்து மின்சாரம் தண்டபாணி மீது பாய்ந்ததாகவும், இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தண்டபாணியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டபாணியின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது, பார்த்தவர்களையும் கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிளாஸ்டிக் குழாய் அமைக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க கட்டிடங்கள் மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளின் மீது பிளாஸ்டிக் குழாய் அமைக்க கடை உரிமையாளர்களுக்கு அல்லது வீட்டு உரிமையாளர்களுக்கு மின்வாரியத்துறையினர் அறிவுறுத்தி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கட்டிட வேலை செய்யும்போது கட்டிடங்களுக்கு மேல் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் பட்சத்தில் மின்வாரிய துறையினர் அந்த இடங்களை பார்வையிட்டு, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.