ஆத்தூர் அருகே வாகன சோதனை: டைல்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ.16¼ லட்சம் பறிமுதல்-தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஆத்தூர் அருகே வாகன சோதனையில் டைல்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ.16¼ லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே வாகன சோதனையில் டைல்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ.16¼ லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாகன தணிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் நல்லுசாமி மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை என்ற இடத்தில் நேற்று காலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ரூ.16¼ லட்சம் பறிமுதல்
அப்போது ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 16 லட்சத்து 31 ஆயிரத்து 840 ரூபாய் இருந்தது. காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவரது பெயர் சதீஷ்குமார் என்பதும், 36 வயதான அவர், அம்மம்பாளையத்தில் டைல்ஸ் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர், கடையில் கடந்த 2 நாட்களாக வியாபாரம் ஆன பணத்தை ஆத்தூரில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அம்மம் பாளையத்தில் இருந்து பணத்தை எடுத்து வருவதாகவும் கூறினார். அந்த பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் சதீஷ்குமாரிடம் இல்லை என்றும், எனவே அந்த பணத்தை பறிமுதல் செய்வதாகவும் பறக்கும் படை துணை தாசில்தார் நல்லுசாமி கூறினார்.
கருவூலத்தில் ஒப்படைப்பு
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆத்தூர் நகரசபை ஆணையாளர் பொன்னம்பலத்திடம் அவர்கள் கொடுத்தனர். அவர், பணத்தை ஆத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.
வாகன சோதனையின் போது டைல்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ.16¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.