ஏற்காட்டில் பரபரப்பு: தொழிலாளி வீட்டில் பயங்கர தீ விபத்து-தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
தொழிலாளி வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஏற்காடு:
தொழிலாளி வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தொழிலாளி
ஏற்காட்டில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஏற்காடு அழகாபுரத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 61). தொழிலாளி. இவருடைய மனைவி ஆயா பொண்ணு (55). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்ராஜன் தன்னுடைய மனைவியுடன் உறவினர் ஒருவரது வீட்டு திருமணத்துக்காக வெளியூர் சென்று இருந்தார். அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு திடீரென சவுந்தர்ராஜன் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது சவுந்தர்ராஜன் வீடு தீப்பற்றி எரிந்தது.
தீயை அணைத்தனர்
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சவுந்தர்ராஜன் வீடு சேதம் அடைந்ததுடன், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாயின.
தகவல் அறிந்து சவுந்தர்ராஜனும் ஏற்காடுக்கு விரைந்து வந்தார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டர் வெடிக்கவில்லை. இதனால் லேசான விபத்து மட்டும் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர் வெடித்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று கூறினர். இருந்தாலும் பஸ் நிலையம் பகுதியில் உள்ள சவுந்தர்ராஜன் வீட்டில் நடந்த இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.