‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்விளக்கு சரிசெய்யப்பட்டது
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிழக்கு சாணார்பாளையம் எஸ் வளைவில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதனால் அந்த பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர் என்று நேற்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து பழுதான மின்விளக்கை அதிகாரிகள் சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
-சங்கர், கிழக்கு சாணார்பாளையம், சேலம்.
===
தரமற்ற சாலை
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு மலையேற்றப்பாதை செல்லும் சாலை தரமற்று காணப்படுகிறது. இந்த சாலையில் சென்று வர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.
-சிவன், கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்.
சேலம் 26-வது வார்டு குப்தாநகரில் 2 மாதத்திற்கு முன்பு சீரமைப்பு பணிக்காக சாலையில் உள்ள மண் அள்ளி அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. தரம் இல்லாத இந்த சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தோடு சாலையை கடந்து செல்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-கார்த்திக், குப்தா நகர், சேலம்.
==
நடைபாதை ஆக்கிரமிப்பு
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பிற்கான பள்ளியின் வெளிப்பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைபாதையை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர். இந்த பாதைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அந்த வழியாக மாணவர்கள், வாகனங்கள் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த நடைபாதை ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், மங்களபுரம், சேலம்
===
காட்சிபொருளான குடிநீர் தொட்டி
தர்மபுரி மாவட்டம் ரங்கசமுத்திரம் ஊராட்சி 11-வது வார்டு குடிநீர் தேவைக்கான நீர்த்தேக்க தொட்டி உள்ளது. கடந்த 3 வருடங்களாக இந்த தொட்டியில் குடிநீர் வராமல் காட்சி பொருளாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், ரங்கசமுத்திரம்.
========
வாகனங்களை நிறுத்தக்கூடாது
கிருஷ்ணகிரியில் தர்மராஜா கோவில் தெருவில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்புறம் 2 தபால் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், இந்த தபால் நிலையத்திற்கு வந்து தபால்களை அனுப்புகிறார்கள்.
இந்த தபால் பெட்டிகளை மறைத்தபடி அங்கு ஏராளமானவர்கள் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் தபால்களை சேகரிக்கும் ஊழியர்களுக்கும், தபால்கள் அனுப்ப வரும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தலைமை தபால் நிலையம் முன்பு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஷா, கிருஷ்ணகிரி.
==
தார்சாலை அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்டசீமனூர் ஊராட்சி ஈஸ்வரதாசரபள்ளி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.செந்தில், ஈஸ்வரதாசரபள்ளி, கிருஷ்ணகிரி.
===
ஆபத்தான அங்கன்வாடி மையம்
நாமக்கல் மாவட்டம் தத்தாத்திரிபுரம் (எ) அகரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கும் ஆபத்தான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், அகரம், நாமக்கல்.
=====
ஆபத்தான மின்கம்பம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி காமராஜர் நகரில் மின்கம்பம் ஒன்று குடிநீர் தொட்டி அருகில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் சூழலில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் ஏதாவது விபரீதம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
பெருமாள், மிட்டப்பள்ளி, ஊத்தங்கரை.
===
சாக்கடையில் தேங்கும் குப்பைகள்
சேலம் அப்சரா தியேட்டர் அருகே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடையில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், சேலம்.