அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு; நீதிபதியை கண்டித்து மைசூருவில் முழுஅடைப்பு போராட்டம்
அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த நீதிபதியை கண்டித்து மைசூரு டவுனில் முழு அடைப்பு நடந்தது. ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. மேலும் அரசு பஸ் சேவை முடங்கியது.
மைசூரு: அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த நீதிபதியை கண்டித்து மைசூரு நகரில் முழு அடைப்பு நடந்தது. ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. மேலும் அரசு பஸ் சேவை முடங்கியது.
அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு
ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நீதிபதி மல்லிகார்ஜூன கவுடா அம்பேத்கர் உருவப்படத்தை அகற்ற கூறி அவமதித்துள்ளார். இதற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்ததை கண்டித்து மைசூரு நகரில் 7-ந்தேதி(நேற்று) முழு அடைப்புக்கு அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
முழுஅடைப்பு போராட்டம்
அதன்படி நேற்று மைசூரு நகரில் முழு அடைப்பு நடந்தது. இந்த முழு அடைப்புக்கு வியாபாரிகள், ஆட்டோ-வாடகை கார் டிரைவர்கள், விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து மூடினர்.
மேலும் திறந்திருந்த சில கடைகளை போராட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தி மூட வைத்தனர். ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. காய்கறி மார்க்கெட், சந்தைகள் நடைபெறவில்லை. இதைதொடர்ந்து சிட்டி பஸ் நிலையம் கே.ஆர்.சர்க்கிள், பெங்களூரு-ஊட்டி ரோடு, அம்பேத்கர் சர்க்கிள் மற்றும் அசோகபுரம், கிருஷ்ணமூர்த்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி ரோடு ஜெயசாமராஜேந்திர உடையார் சர்க்கிள், மெட்ரோ போல் சர்க்கிள், ரெயில்நிலைய சர்கிள் உள்பட பல இடங்களில் இருசக்கர வாகனங்களை சுற்றிலும் நிறுத்திவிட்டு நூதன போராட்டத்தில் சில அமைப்பினர் ஈடுபட்டனர்.
அரசு பஸ் சேவை முடங்கியது
சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் சென்றது. ஆனால் போராட்டக்காரர்கள் பஸ்களை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் இறங்கி வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனால் அரசு பஸ்கள், அரசு பஸ் பணிமனைக்கு திரும்பி சென்றன.
இதன்காரணமாக மைசூரு நகரத்தில் அரசு பஸ்கள் சேவை முடங்கியது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு நடத்தி பஸ்கள் கண்ணாடியை உடைத்தனர்.
இதனால் மைசூரு நகர மக்கள் வேலை உள்ளிட்டவற்றிற்கு வெளி மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் வெளியூர் மக்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் சில இடங்களில் நீதிபதி மல்லிகார்ஜூன கவுடா மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உருவப்பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம்போல் வந்தனர். ஆனால் முழு அடைப்பு தீவிரமானதால் நகரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் வகுப்பு தொடங்கு முன்னரே மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. மொத்தத்தில் மைசூரு நகரில் முழு அடைப்பு வெற்றி பெற்றது. மேலும் சிறு சம்பவங்களை தொடர்ந்து அமைதியான முறையில் இந்த முழுஅடைப்பு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.