நதிகள் இணைப்பு திட்டத்தில் சமரசம் கிடையாது; பசவராஜ் பொம்மை ஆவேசம்

நதிகள் இணைப்பு திட்டத்தில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்றும், இதில் கர்நாடகத்தின் நீர்பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை திட்டவட்டமாக கூறினார்.

Update: 2022-02-07 21:10 GMT
பெங்களூரு: நதிகள் இணைப்பு திட்டத்தில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்றும், இதில் கர்நாடகத்தின் நீர்பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை திட்டவட்டமாக கூறினார்.

2 நாள் சுற்றுப்பயணம்

கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை  தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் 4 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் மூத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க பா.ஜனதா மேலிடமும், முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையும் முடிவு செய்துள்ளனர். 

இதில் அதிரடி நடவடிக்கையாக அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, சரியாக செயல்படாத 12 மந்திரிகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விவாதிக்கவும், கர்நாடக அரசின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், நீர்ப்பாசன திட்டங்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் நதிகள் இணைப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல முடிவு செய்திருந்தார். அதன்படி பசவராஜ்பொம்மை நேற்று காலை பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றார். 

அங்கு பசவராஜ்பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தின் நிலை

நதிகள் இணைப்பு விஷயத்தில் கர்நாடகத்தின் நிலை தெளிவாக உள்ளது. இதில் கர்நாடகத்தின் நீர் பங்கீட்டை முடிவு செய்ய வேண்டும். திட்ட அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். இந்த நதிகள் இணைப்பு விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. நதிகள் இணைப்பு வேறு, உபரி நீர் வேறு.

நான் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது, நதிகள் இணைப்பில் மாநிலங்களுக்கு நீர் ஒதுக்கீடு செய்யும்போது, ஆற்று பகுதியில் உற்பத்தி ஆகும் நீர், எங்களின் நீர் தேவை மற்றும் சமபங்கு என்ற மூன்று விஷயங்களின் அடிப்படையில் நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினேன். இந்த நிலைப்பாட்டில் கர்நாடகம் உறுதியாக இருக்கிறது.

சமரசம் செய்யமாட்டோம்

கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு நதிகள் இணைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் கர்நாடகத்தின் பங்கை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கர்நாடகத்தில் கிருஷ்ணா, காவிரி ஆறுகள் மக்களின் ஜீவநாடியாக உள்ளது. 

அதனால் இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை நாங்கள் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இந்த விஷயத்தை நாங்கள் மத்திய அரசுக்கு தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். 

தமிழகத்திற்கு பயன்

கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி, தர்மகங்கா-பிஞ்சல், பர்-தபி-நர்மதா ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதில் கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு ஆகிய நதிகள் கர்நாடகத்திலும் ஓடுகின்றன. இந்த நதிகள் இணைப்பால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் பயன் கிடைக்கும் என்று கர்நாடகம் கருதுகிறது.

சமீபத்தில் திருப்பதியில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பசவராஜ் பொம்மை, நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு கர்நாடகத்தின் பங்கை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிமந்திரியுடன் சந்திப்பு

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் அவர், கர்நாடக எம்.பி.க்கள் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக நீர்ப்பாசன திட்டங்கள், நதிநீர் இணைப்பு, மேகதாது அணை விவகாரம் குறித்து எம்.பி.க்கள், மத்திய மந்திரிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். 

அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து பேசினார். அவரிடம் கர்நாடக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார். 

15-வது நிதிக்குழு

அதையடுத்து மத்திய  ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோரையும் பசவராஜ்பொம்மை சந்தித்து பேசினார். நிலக்கரி கொண்டுவர சரக்கு ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரியிடம் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீர்ப்பாசன திட்டங்கள், ரெயில்வே திட்டங்கள், நகர வளர்ச்சி, துறைமுகங்கள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், அவற்றை செயல்படுத்த  மத்திய அரசின் உதவி தேவை என்பது குறித்தும் எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவித்தேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை முழுமையாக அமல்படுத்த எல்லா ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன். 15-வது நிதி குழுப்படி கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டேன்.

சில கட்டுப்பாடுகள்

ரெயில்வே மந்திரியை நேரில் சந்தித்து பேசினேன். நிலக்கரி கொண்டுவருவதற்கான கட்டணம் அதிகமாக உள்ளது. இதை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தேன். இந்த கட்டணத்தை குறைப்பதாக அவர் உறுதியளித்தார். சுகாதாரத்துறை மந்திரியையும் நேரில் சந்தித்து பேசினேன். மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டேன். அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதுபோல் மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங்கை நேரில் சந்தித்தேன். மின் விநியோக நிறுவனங்கள் கடன் பெற சில கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல என்று கூறினேன். அதனால் அந்த கட்டுப்பாடுகளை நீக்குமாறு கேட்டு கொண்டேன். கர்நாடகம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி மானியம் வழங்குகிறது. மின்சாரத்துறையில் கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விரைவாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

நிதி பற்றாக்குறை

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் கர்நாடகத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மின்சாரத்துறையில் 4 சதவீத நிதி பற்றாக்குறை தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளனர். அதில் அரை சதவீதம் மின்சாரத்துறை சீர்திருத்திற்கு என்று முடிவு செய்துள்ளனர். இதை நீக்க வேண்டும் என்று கேட்டேன். அதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

ரெயில்வே திட்டங்கள் மத்திய-மாநில அரசுகள் தலா 50 சதவீதம் வழங்குகின்றன. அனைத்து திட்டங்களுக்கும் ஒரே ஆண்டில் நிதி ஒதுக்க இயலாது. முன்னுரிமை அடிப்படையில் நிதி மற்றும் நிலத்தை மாநில அரசு ஒதுக்குகிறது. மாநில அரசு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் செய்யவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளன. அதனால் தான் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதமாகிறது.

சந்திக்க வாய்ப்பு

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டேன். அவர் இன்று (அதாவது நேற்று) உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் உள்ளார். நாளை (இன்று) டெல்லி வர இருப்பதாக அறிந்தேன். அதனால் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அவரை சந்தித்தால் அரசியல் நிலை குறித்துபேசுவேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்