திருப்பரங்குன்றம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அல்லாளப் பேரியில் வசித்து வந்தவர் காந்தி(வயது 35), கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (24). இவர்கள் நேற்று காரியப்பட்டி அல்லாளப்பேரியில் இருந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டைக்கு கட்டிட வேலைக்கு வந்தனர். இந்த நிலையில் வேலை முடித்து விட்டு மாலையில் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்றுகொண்டிருந்தனர். காந்தி வாகனத்தை ஓட்டிவந்தார். வண்டியின் பின்சீட்டில் முத்துகிருஷ்ணன் உட்கார்ந்து வந்தார். விருதுநகர்-சமயநல்லூர் நான்குவழி சாலையில் திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் காந்தி, முத்துகிருஷ்ணனும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் காந்தி, முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினர். இதற்கிடையில் மோதிய லாரி அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த நிலையில்சம்பவ இடத்திலேயே காந்தி இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்த இறந்துபோன காந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணனை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியையும், டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.