கடையநல்லூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.1.80 லட்சம் சிக்கியது
கடையநல்லூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சிக்கியது.
கடையநல்லூர்:
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பரிசுப் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை தடுப்பதற்காக ஆங்காங்கே பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் நேற்று கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் செங்கோட்டை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்டல் சாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகிருஷ்ணன், தலைமை காவலர் ரமேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், வீரசிகாமணியை சேர்ந்த மதன்ராஜ் என்பதும், அவரது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது.
அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், மதன்ராஜ் கடையநல்லூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அதே நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு கிளைக்கு பணத்தை கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.