நெல்லை மாவட்டத்தில் 388 பதவிகளுக்கு 1,790 பேர் போட்டி

நெல்லை மாவட்டத்தில் 388 பதவிகளுக்கு 1,790 பேர் போட்டியிடுகிறார்கள்.;

Update: 2022-02-07 20:33 GMT
நெல்லை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 5-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் நேற்று தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பலரும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் 540 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று 61 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 408 பேர் களத்தில் உள்ளனர்.

அம்பை நகராட்சியில் 21 வார்டுகளில் போட்டியிடுவதற்கு 89 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 5 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 15 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 69 பேர் போட்டியில் உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளில் 96 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் 11 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 84 பேர் போட்டியில் உள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 144 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 15 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றதால் 129 பேர் களத்தில் நிற்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 17 பேரூராட்சிகள் உள்ளன. இங்குள்ள 273 வார்டுகளுக்கு 1,357 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று 225 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து போட்டியில்லாத வார்டுகளில் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோபாலசமுத்திரம், மூைலக்கரைப்பட்டி, நாங்குநேரி, நாரணம்மாள் ஆகிய 4 பேரூராட்சிகளில் தலா ஒருவரும், மேலச்செவல் பேரூராட்சியில் 3 பேரும், வீரவநல்லூர் பேரூராட்சியில் 2 பேரும் என மொத்தம் 9 பேர் போட்டியின்றி தேர்வு ஆனார்கள். மீதமுள்ள 264 பதவி இடங்களை கைப்பற்ற 1,100 பேர் களத்தில் நிற்கிறார்கள். ஆகமொத்தம் நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள 388 பதவிகளுக்கு 1,790 பேர் போட்டியிடுகிறார்கள்.

மேலும் செய்திகள்