பவானிசாகர் அருகே பரிதாபம்: வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
பவானிசாகர் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.;
பவானிசாகர்
பவானிசாகர் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
கல்லூரி மாணவர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அருகே உள்ள புதுகுய்யனூரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 20). சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். ஜீவானந்தம், பன்னீர்செல்வத்துடன் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் ஜீவானந்தம் பன்னீர்செல்வத்துடன் மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்குச் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று 2 பேரும் பவானிசாகர் அருகே அவர்களுடைய நண்பரின் திருமணத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை பன்னீர்செல்வம் ஓட்டினார். அவருக்கு பின்னால் ஜீவானந்தம் உட்கார்ந்திருந்தார்.
விபத்தில் சாவு
பவானிசாகர்-புளியம்பட்டி ரோட்டில் உள்ள வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே காலை 7.45 மணி அளவில் சென்றபோது மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜீவானந்தமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டிரைவர் கைது
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் அருள்ராஜ் (20) என்பவரை கைது செய்தார்.
இறந்்த ஜீவானந்தமின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.