மரத்தில் கார் மோதி பெண் சாவு- கணவர் உள்பட 4 பேர் காயம்
விஜயமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
பெருந்துறை
விஜயமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
மரத்தில் கார் மோதியது
திருப்பூர் அருகே உள்ள சுப்பிரமணிய நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 47). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். அவருடைய மனைவி விஜயலட்சுமி (44). இவர்கள் தங்கள் உறவினர்களுடன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள உறவினர் வீட்டு கிரகபிரவேசத்துக்கு சென்றுவிட்டு நேற்று திருப்பூருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை அடுத்துள்ள பகலாயூர் அருகே காலை 6 மணி அளவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது.
பெண் சாவு
காரில் இருந்தவர்கள் “அய்யோ, அம்மா” என்று கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் சண்முகசுந்தரம், காரை ஓட்டி வந்த அவரது உறவினர் சுரேஷ் (45), சுரேசின் மனைவி சுஜாதா (36), மகன் ஹர்ஷவர்தன் (4) ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
4 பேர் காயம்
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த சுரேசின் மகள் ஜெயதுர்கா காயமின்றி உயிர் தப்பினார். காயம் அடைந்த 4 பேரும் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.