புகார் பெட்டி

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-07 20:11 GMT
பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
மணிகண்டம் ஒன்றியம், பெரியநாயகி சத்திரத்தில் திருச்சி மணப்பாறை சாலையோரம் பயணிகள் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. அது தற்போது சேதமடைந்து முட்புதர்கள் மண்டி பயணிகள் யாரும் அங்கு நிற்க முடியாத நிலையில் உள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் பயணத்திற்கு செல்லும்போது மழையிலும், வெயிலிலும் நின்றவாறு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெரியநாயகி சத்திரத்தில் (சத்திரப்பட்டி) முட்புதர்கள் மண்டி சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மணிகண்டம்.
வேகத்தடை அமைக்க வேண்டும் 
திருச்சி மாவட்டம், தொட்டியம் சந்தைபேட்டை மெயின் ரோட்டின் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி   அமைந்துள்ளது. 6-ம் வகுப்பு முதல்  பிளஸ்-2 வரை ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் அப்பகுதி சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி.
எலும்புக் கூடாக காட்சி அளிக்கும் மின்கம்பங்கள் 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவில் பொன்னம்பட்டி பேரூராட்சி உள்ளது. இங்கு துவரங்குறிச்சியில் இருந்து உடையாம்பட்டிக்கு செல்லும் சாலையில் 2 மின் கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியேயும் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது.  இதனால் அந்த 2 மின்கம்பங்கள் எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே மின்கம்பங்கள் கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பே இந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருப்பதி, உடையாம்பட்டி. 

மேலும் செய்திகள்