மராட்டிய மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைகிறது

மராட்டிய மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. புதிதாக நேற்று 6,436 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதோடு, 18,425 பேர் குணம் அடைந்தனர்.

Update: 2022-02-07 18:56 GMT
கோப்பு படம்
மும்பை, 
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மராட்டிய மாநிலத்தில் கொரோனா முதல் மற்றும் 2-வது அலை மக்களை கடுமையாக வாட்டி வதைத்தது. 
3-வது அலையின் வேகம்
பல உயிர்களை பறித்ததுடன், மக்களையும் வீட்டில் முடக்கி, பொருளாதாரத்தையும் சரிவை நோக்கி இழுத்து சென்றது. இந்த நோய் தொற்று குறைந்து மக்கள் பெருமூச்சு விடுவதற்குள் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா 3-வது அலை மராட்டியத்தில் அடியெடுத்து வைத்தது. 
தொடக்கம் முதலே வேகமாக பரவிய நோய் தொற்று மக்களை பீதியில் ஆழ்த்தியதுடன், வீடுகளில் முடங்க செய்தது. இதன் காரணமாக தளர்த்தப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டன. 
40 ஆயிரம் பேர் பாதிப்பு
தொற்று பரவுவதை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் நோய் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றது. ஜனவரி மாதம் 2 வாரத்தில் உச்சம் தொட்ட கொரோனா பரவல் காரணமாக ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் நம்மதி தரும் விதமாக முதல் 2 அலைகளை போல உயிரிழப்பையோ, மருத்துவ நெருக்கடியையோ 3-வது அலை ஏற்படுத்தவில்லை. 
இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. அதிலும் கடந்த சில நாட்களில் நோய் பாதிப்பு குறையும் வேகம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
அதிரடி குறைவு
நேற்று முன்தினம் மராட்டியத்தில் 9 ஆயிரத்து 666 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். மேலும் 66 பேர் தொற்றின் தாக்கம் காரணமாக உயிரிழந்தனர். 
இந்தநிலையில் நேற்று கொேரானா பாதிப்பு அதிரடியாக சரிந்தது. மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 436 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து மராட்டியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 10 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.  
இதேபோல இறப்பு எண்ணிக்கையும் சரிந்தது. நேற்று தொற்று தாக்கத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 24 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது.
நோயில் இருந்து விடுதலை
இதேபோல கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 
நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 175 பேரும், நேற்று 18 ஆயிரத்து 425 பேரும் நோய் தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்தனர். இதன்மூலம் கொரோனாவுடன் போராடி வென்றவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 57 ஆயிரத்து 34 ஆக அதிகரித்து உள்ளது.
தற்போது மாநிலத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
இதேபோல மாநிலத்தில் புதிதாக யாருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை. இதுவரை ஒமைக்ரான் கண்டறியப்பட்ட 3 ஆயிரத்து 334 பேரில் 2 ஆயிரத்து 23 பேர் குணமாகி உள்ளனர்.
மும்பை நிலவரம்
தலைநகர் மும்பையிலும் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து உள்ளது. நேற்று நகரில் பாதிப்பு 500-க்கும் கீழ் சென்றது. புதிதாக 356 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியானார்கள். இதுவரை நகரில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்து உள்ளனர். 
நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 760 நாட்களாக உள்ளது. சீல் வைக்கப்பட்ட கட்டிடம் ஒன்று மட்டுமே உள்ளது.
மந்திரி கணிப்பு
சமீபத்தில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டி ஒன்றில், மார்ச் மாதம் 2-ம் வாரத்திற்குள் கொரோனா 3-வது அலை முடிவு வர வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார்.
அவரின் கணிப்புக்கு உறுதி சேர்க்கும் வகையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மராட்டிய மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்