கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கண்ணோட்டம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி ஆகும்.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி
கிருஷ்ணராயபுரம் ஊராட்சியாக இருந்த நிலையில், கடந்த 1971-ம் ஆண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பேரூராட்சியில் 2 வருவாய் கிராமங்கள், 6 குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி மொத்தம் 11,533 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 5,727 பேரும், பெண்கள் 5,806 பேரும் அடங்குவர். இங்கு 15 வார்டுகள் அமைந்துள்ளது. விவசாயமே பிரதான தொழிலாக கருதப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த சரோஜா தலைவராக இருந்துள்ளார்.
பேரூராட்சியில் குப்பைகளை சேகரிக்க தேவையான வாகனங்கள் உள்ளது. குப்பைகளை கொட்டி தரம் பிரிக்க பிச்சம் பட்டியில் சொந்த கட்டிடம் உள்ளது. கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலக கட்டிடம் இட நெருக்கடியில் உள்ளது. எனவே பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். தொகுதியின் தலைமையிடமாக இருந்தும் பஸ் நிறுத்த வசதி இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகள்
அதேபோல கிருஷ்ணராயபுரத்தில் ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தோட்டக்கலைத் துறை அலுவலகம், அரசு பள்ளிகள், வங்கிகள் என பல்வேறு வேலை நிமிர்த்தமாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்படி இருந்தும் பஸ் நின்று செல்லும் இடத்தில் கழிவறை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் சாலை வசதிகள் செய்து தர வேண்டும். பிச்சம்பட்டியில் குறுகலான இரண்டு வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த வேண்டும். கோவக்குளம் ஏரியை தூர்வார வேண்டும். தாராபுரத்தனூரில் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கிருஷ்ணராயபுரத்தை கிருஷ்ணதேவராயர் ஆட்சி புரிந்ததால் கிருஷ்ணராயபுரம் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு பிரசித்தி பெற்ற திருமாலீஸ்வரர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.